பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: நெல்லை, தென்காசியில் 95.01 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: நெல்லை, தென்காசியில் 95.01 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 16 July 2020 10:15 PM GMT (Updated: 2020-07-17T03:18:28+05:30)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வில் 95.01 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நெல்லை, 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தென்காசி கல்வி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மேற்கண்ட 5 கல்வி மாவட்டங்களிலும் 35 ஆயிரத்து 046 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 32 ஆயிரத்து 296 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுளனர்.

மொத்தம் தேர்வு எழுதிய 15 ஆயிரத்து 315 மாணவர்களில் 14 ஆயிரத்து 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 19 ஆயிரத்து 731 மாணவிகளில் 19 ஆயிரத்து 114 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 92.60 சதவீதம் மாணவர்களும், 96.87 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளர். மொத்தம் தேர்ச்சி சதவீதம் 95.01 ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.41 ஆகும். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.6 சதவீதம் ஆகும்.

காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகள் தங்களது செல்போன் மூலம் தேர்வு முடிவுகளை பார்த்தனர். சில பள்ளிக்கூடங்களில் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் அதிகம் வரவில்லை.

Next Story