பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்


பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்
x
தினத்தந்தி 17 July 2020 4:35 AM IST (Updated: 17 July 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்த நிலையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இணையதளம் மூலமாக நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேர்வு முடிவை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 211 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 418 மாணவர்கள், 12 ஆயிரத்து 980 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 398 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 9 ஆயிரத்து 999 மாணவர்கள், 12 ஆயிரத்து 725 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 724 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 95.98 சதவீதமும், மாணவிகள் 98.04 சதவீதமும் தேர்ச்சி பெற்றதுடன் ஒட்டுமொத்தமாக 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது. கடந்த ஆண்டை விட 1.75 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

111 பள்ளிகள்

இந்த ஆண்டு மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகள், 1 மாநகராட்சி பள்ளி, 4 அரசு உதவி பெறும் பள்ளிகள் (பகுதி), 8 சுயநிதி பள்ளிகள், 89 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என மொத்தம் 111 பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி சதவீதத்தை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 66 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருந்தன.

தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெறுவதற்காக சிறப்பாக பணியாற்றிய கல்வி அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் காலத்திலும் மாணவ-மாணவிகள் முழு ஈடுபாட்டுடன், முழு உழைப்பையும் செலுத்தி சிறந்த முறையில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

பின்னர் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், திருப்பூர் கல்வி மாவட்ட அதிகாரி பழனிசாமி மற்றும் அதிகாரிகளை கலெக்டர் பாராட்டினார்.

Next Story