ஆடி மாதம் தொடக்கம்: தியாகராயநகரில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர் - ரங்கநாதன் தெருவில் கூடிய கூட்டம்


ஆடி மாதம் தொடக்கம்: தியாகராயநகரில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர் - ரங்கநாதன் தெருவில் கூடிய கூட்டம்
x
தினத்தந்தி 17 July 2020 6:05 AM IST (Updated: 17 July 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, சென்னை தியாகராயநகரில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

சென்னை, 

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில் திருவிழாக்களுக்கு அடுத்தபடியாக மக்களின் நினைவுக்கு வருவது தள்ளுபடிதான். ஆடி மாதத்தில் ஜவுளி பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட் களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்பதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தளர்வுகள் எதிரொலியாக சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை திறந்திருக்கின்றன. இந்த நிலையில் தள்ளுபடியை நினைவூட்டும் ஆடி மாதம் நேற்று பிறந்தது. இதையொட்டி கடைகளில் ஆடித்தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. சென்னையில் தியாகராய நகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்பட இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் ஆடித்தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒரு சட்டை வாங்கினால் இன்னொரு சட்டை இலவசம், ஒரு சேலை வாங்கினால் இன்னொரு சேலை இலவசம் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. ஜவுளிக்கடைகள் போல எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஆடித்தள்ளுபடி கோதாவில் குதித்துள்ளன.

இதனால் சென்னையின் வர்த்தக பிரதேசம் என அழைக்கப்படும் தியாகராயநகரில் நேற்று தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். ரங்கநாதன் தெருவிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. துணிமணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

நகைக் கடைகளிலும் ஆடித்தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகை கடைகளிலும் மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. ஆடி மாதம் தள்ளுபடி மாதமாக களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story