பீதர் தொகுதி, பா.ஜனதா எம்.பி. பகவந்த் கூபாவுக்கு கொரோனா - தொடர்பில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு தனிமை


பீதர் தொகுதி, பா.ஜனதா எம்.பி. பகவந்த் கூபாவுக்கு கொரோனா - தொடர்பில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு தனிமை
x
தினத்தந்தி 17 July 2020 3:30 AM IST (Updated: 17 July 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

பீதர் தொகுதி பா.ஜனதா எம்.பி. பகவந்த் கூபாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனிமையில் வைக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், போலீசார், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரையும் பாகுபாடு இன்றி வைரஸ் தாக்கி வருகிறது.

ஏற்கனவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, ராஜ்குமார் பட்டீல் தெல்கர், அனில் பெனகே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேகவுடா, அஜய் பட்டீல், ரங்கநாத் ஆகியோரும், மண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.யும், மறைந்த கன்னட நடிகர் அம்பரீசின் மனைவியுமான சுமலதா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களுடன் தற்போது கொரோனா பாதிப்பில் மேலும் ஒரு எம்.பி.யும் இணைந்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பீதர்(மாவட்டம்) தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் பகவந்த் கூபா. இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பகவந்த் கூபா திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் பீதரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பகவந்த் கூபாவிடம் இருந்து சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பகவந்த் கூபாவின் மருத்துவ அறிக்கை நேற்று முன்தினம் சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டில் வைத்து பகவந்த் கூபா எம்.பி.க்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பகவந்த் கூபா எம்.பி.யுடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், உம்னாபாத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜசேகர் பட்டீல், அவரது சகோதரரும், கர்நாடக மேல்-சபை உறுப்பினருமான சந்திரசேகர் பட்டீல் ஆகியோர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகர் பட்டீல், சந்திரசேகர் பட்டீல், பகவந்த் கூபாவின் குடும்ப உறுப்பினர்கள், கார் டிரைவர், அலுவலக ஊழியர்கள் ஆகியோரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

Next Story