கொரோனாவை தடுப்பதில் எடியூரப்பா அரசு தோல்வி: கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி


கொரோனாவை தடுப்பதில் எடியூரப்பா அரசு தோல்வி: கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்  - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2020 3:45 AM IST (Updated: 17 July 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை தடுப்பதில் எடியூரப்பா அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. கடந்த சில தினங்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

இந்த நிலையில் சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது யாருடைய கையிலும் இல்லை. கொரோனாவில் இருந்து மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். ஸ்ரீராமுலுவின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

கொரோனாவிடம் இருந்து மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார். சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும் அவர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல. இதனால் அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவினருக்கு இருந்த ஆர்வம், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் இல்லை. ஸ்ரீராமுலு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல. அரசின் கருத்தை தான் அவரும் கூறியுள்ளார். கொரோனாவை தடுப்பதில் எடியூரப்பா அரசு தோல்வி அடைந்து விட்டது. இதனால் கர்நாடக அரசை கலைத்து விட்டு மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story