சாத்தான்குளம் அருகே சிறுமி படுகொலை: வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


சாத்தான்குளம் அருகே சிறுமி படுகொலை: வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 16 July 2020 10:30 PM GMT (Updated: 17 July 2020 1:11 AM GMT)

சாத்தான்குளம் அருகே சிறுமியை படுகொலை செய்தது ஏன்? என கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சாத்தான்குளம், 

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம் படுகொலை செய்யப்பட்டு சாத்தான்குளம் அருகே பாலத்தின் அடியில் டிரம்மில் பிணமாக கிடந்தாள். அந்த சிறுமியை கொலை செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கல்லூரி மாணவருமான சுயம்பு மகன் நித்திஷ்வரன் ஆகிய 2 பேரையும் சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் முத்தீஸ்வரன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு: எனது தந்தை சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால், என்னை அவர் அடிக்கடி திட்டுவார். அன்றும் அவர் என்னை திட்டினார். அந்த வருத்தத்தில் நான் இருந்தேன். அப்பொழுது பக்கத்துவீட்டை சேர்ந்த சிறுமி எங்கள் வீட்டிற்குவந்தாள். டிவி பார்க்க வேண்டும் என்று கூறினாள். நான் ஆத்திரத்தில் அவளை திட்டினேன். இதில் கோபப்பட்ட சிறுமி கல்லை தூக்கி என் மீது எறிந்தாள். உடனே ஆத்திரத்தில் அவள் கழுத்தை பிடித்து நெரித்தேன். இதில் அவள் உயிரிழந்தாள். இதனால் பதட்டமடைந்த நான் எனது நண்பர் நித்திஷ்வரனிடம் கூறினேன். பின்னர் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து எங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை வைத்து எனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு இருவரும் அருகிலுள்ள வடலிவிலை கிராமத்திற்கு சென்றோம். அங்குள்ள இசக்கி அம்மன் கோவில் பாலத்தின் கீழே சிறுமியின் உடலை வீசி விட்டு வந்துவிட்டோம்’ என தெரிவித்துள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் நேற்று சிறுமியின் பிரேத பரிசோதனை முடிந்தது. இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். சிறுமியின் தாய்க்கு சத்துணவு ஊழியர் வேலை வழங்க வேண்டும். ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் சகோதரன் படித்து முடித்தபிறகு அரசு வேலை வழங்க உறுதி வழங்க வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story