கோவில்பட்டி அருகே போலீசார் வாகன சோதனை: காரில் துப்பாக்கியுடன் வந்த நெல்லை ரவுடி அதிரடி கைது - மேலும் 2 பேர் சிக்கினர்-பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்


கோவில்பட்டி அருகே போலீசார் வாகன சோதனை: காரில் துப்பாக்கியுடன் வந்த நெல்லை ரவுடி அதிரடி கைது - மேலும் 2 பேர் சிக்கினர்-பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 July 2020 4:00 AM IST (Updated: 17 July 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் துப்பாக்கியுடன் வந்த நெல்லையைச் சேர்ந்த ரவுடி அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும், 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று அதிகாலை சோதனைச்சாவடியில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர். இதில் காரில் இருந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த 3 பேரையும் காரில் இருந்து இறங்கச் செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (வயது 37), பாளையங்கோட்டை படப்பைகுறிச்சியை சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (24), கொக்கிரகுளம் மேலநத்தத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் சுரேந்தர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ராஜ்குமார் இடுப்பில் 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட நிலையில் இருந்தது. உடன் இருந்த வினோத், சுரேந்தர் ஆகியோரிடம் அரிவாள் இருந்தது. இதையடுத்து கள்ளத்துப்பாக்கி, தோட்டாக்கள், அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும், கார் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ராஜ்குமார் மருத்துவ அவசர இ-பாஸ் பெற்றுக்கொண்டு வினோத், சுரேந்தர் ஆகியோருடன் காரில் கடந்த 13-ந்தேதி ஈரோட்டில் நடந்த நண்பர் பிறந்த நாள் விழாவுக்கு சென்று விட்டு, அங்கு தங்கியுள்ளார்.

பின்னர் ஈரோட்டில் இருந்து மருத்துவ அவசரம் என இ-பாஸ் எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் காரில் திரும்பியபோது கோவில்பட்டி சோதனைச்சாவடியில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

இதில் ராஜ்குமார் மீது மதுரை மதிச்சியம், நெல்லை சுத்தமல்லி, புதுக்கோட்டை மாவட்டம், நெல்லை தச்சநல்லூர், சென்னை கிண்டி, நெல்லை தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் 7 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சென்னை பல்லாவரம், நெல்லை தாலுகா, மதுரை அண்ணாநகர், நெல்லை பேட்டை, நெல்லை தச்சநல்லூர், மானூர், சென்னை சங்கர்நகர், நெல்லை டவுன், பாளையங்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அரிவாளால் மிரட்டி கொள்ளையடித்தல், ரவுடித்தனம் செய்தல், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

ஆக மொத்தமாக ராஜ்குமார் 26 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஆவார். இவரது பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சுரேந்தர் மீது ஆள் கடத்தல் வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்களை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் போலீசாரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story