பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்டத்தில் 93.26 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்டத்தில் 93.26 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 3:22 AM GMT (Updated: 17 July 2020 3:22 AM GMT)

பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 93.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 949 மாணவர்களும், 10 ஆயிரத்து 280 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 229 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 187 மாணவர்களும், 9 ஆயிரத்து 813 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.26 சதவீதம் ஆகும்.

பிளஸ்-2 பொதுத்தேர்வை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7,004 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 6 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 92.68 சதவீதம் ஆகும். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 154 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 795 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 94.17 சதவீதம் ஆகும். மேலும் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 71 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 92.96 சதவீதம் ஆகும்.

தேர்வு முடிவுகள் நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அறிவிக்கப்பட்டு காலை 9.30 மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் பரபரப்பாகவும், பதற்றத்துடனும் காணப்பட்டனர். மேலும் தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவ, மாணவிகள் யாரும் வெளியில் வராமல் செல்போன் மூலமே தங்களின் மதிப்பெண்களை பகிர்ந்து கொண்டனர். இதனால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story