மாவட்டத்தில் 13 வயது சிறுவன், சிறுமி உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 231 ஆக உயர்வு


மாவட்டத்தில் 13 வயது சிறுவன், சிறுமி உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 231 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 July 2020 8:32 AM GMT (Updated: 17 July 2020 8:32 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 13 வயது சிறுவன் மற்றும் சிறுமி உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 137 பேர் குணமாகி வீடு திரும்பினர். திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் இறந்த நிலையில், மீதமுள்ள 75 பேர் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 13 வயது சிறுவன், சிறுமி உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று நெட்டவேலாம்பாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், 49 வயது ஆண், திருச்செங்கோடு அருகே எம்.ராசாம்பாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர், கரடிபட்டி அருகே கொண்டம்பட்டியை சேர்ந்த 47 வயது ஆண், மல்லூர் பனங்காடு பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், நாமக்கல் சிவராம்பாளையத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், பவித்திரத்தை சேர்ந்த 60 வயது முதியவர், நாமக்கல் கந்தசாமிநகரை சேர்ந்த 37 வயது ஆண், பரமத்திவேலூரை சேர்ந்த 20 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதேபோல் திருச்செங்கோட்டை சேர்ந்த 29 வயது வாலிபர், 29 வயது பெண், 58 வயது ஆண், பள்ளிபாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், 13 வயது சிறுமி, பெருமாள்கோவில்மேடு பகுதியை சேர்ந்த 25 வயது பெண், திம்மநாயக்கனூரை சேர்ந்த 42 வயது ஆண், நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த 24 வயது பெண், தொட்டியத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஆகியோருக் கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இவர்கள் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே நேற்று ஒருவர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story