சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மற்ற 5 போலீசாரையும் காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு?


சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மற்ற 5 போலீசாரையும் காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு?
x
தினத்தந்தி 17 July 2020 10:45 PM GMT (Updated: 2020-07-18T00:16:05+05:30)

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மற்ற 5 போலீசாரையும் காவலில் எடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை, 

சாத்தான்குளம் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைதான 10 போலீசாரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.ஐ. போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அதில் 4 பேரின் நீதிமன்ற காவலை 15 நாட்கள் நீட்டித்து மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.

இதில் போலீஸ்காரர் முத்துராஜின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. அவரை நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் சிறைகளில் உள்ள விசாரணை கைதிகள், தண்டனை கைதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதை இந்த மாதம் 31-ந்தேதி வரை தள்ளி வைக்கும்படி அனைத்து சிறை நிர்வாகத்துக்கும் மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. எனவே நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு இந்த உத்தரவுபொருந்தும். மேலும், மறு உத்தரவு வரும் வரை அனைத்து கைதிகளும் சிறைகளிலேயே வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சாத்தான்குளம் போலீஸ்காரர் முத்துராஜையும், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வருகிற 31-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கலாம் என்று மதுரை மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமானந்தகுமார் அறிவுறுத்தினார்.

இந்தநிலையில் சாத்தான்குளம் வழக்கில் கைதான மற்ற 5 போலீசாரையும் காவலில் எடுக்க சி.பி.ஐ. மனு தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.ஐ. போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story