பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து 8 மண்டல பொறுப்பாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை - ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முடிவு


பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து 8 மண்டல பொறுப்பாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை - ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முடிவு
x
தினத்தந்தி 17 July 2020 11:00 PM GMT (Updated: 17 July 2020 7:45 PM GMT)

பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 8 மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பெங்களூருவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. பெங்களூருவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பும், அந்த நோயால் ஏற்படும் பலியும் அதிகரித்து வருவதால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் மற்றும் 7 மந்திரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணியாற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களது மண்டலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் 8 மண்டலங்களின் பொறுப்பாளர்களும் தங்களது மண்டலத்தில் கொரோனா பரவல் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் அடிக்கடி அறிக்கை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து 8 மண்டலங்களின் பொறுப்பாளர்களுடன் கிருஷ்ணா இல்லத்தில் நேற்று காலையில் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய மந்திரி சதானந்தகவுடா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, தலைமை செயலாளர் விஜய் பாஸ்கர், 8 மண்டலங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 8 மண்டலங்களின் பொறுப்பு மந்திரிகளும் பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் பெங்களூருவில் ஊரடங்கை நீட்டிக்க முதல்-மந்திரி எடியூரப்பா விரும்பவில்லை. ஊரடங்கு காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது, அதற்கு பதில் கொரோனா பாதித்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எடியூரப்பா கூறியதாக தெரிகிறது.

ஏனெனில் பெங்களூருவில் ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதார பாதிப்பு ஏற்படும், அரசுக்கு வருமானம் கிடைக்காமல் நிதிநிலை மிகவும் மோசமாகி விடும் என்று எடியூரப்பா தெரிவித்திருப்பதாகவும், ஊரடங்கு வருகிற 22-ந் தேதி தான் நிறைவு பெறுவதால், அதுபற்றி நானே இறுதி முடிவு எடுத்து 20-ந் தேதி தெரிவிப்பதாக மந்திரிகளிடம் எடியூரப்பா கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பெங்களூருவில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருப்பதால், அதற்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வாங்கும்படியும், அதனை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுகளுக்கு வழங்கும்படியும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையே வரக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்காமல் இருப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் எந்த மண்டலத்தில் வசிக்கிறார்களோ? அந்த மண்டலத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும், வேறு மண்டலத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லக்கூடாது என்று மண்டல பொறுப்பாளர்களுக்கு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களை சென்று சேர வேண்டும் என்றும், மக்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். எந்த மண்டலத்திலாவது கொரோனா பாதிப்புள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை கிடைக்காமல் இருப்பது, படுக்கை வசதி குறைபாடு உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கு அந்த மண்டலத்தின் பொறுப்பாளராக உள்ள மந்திரியே முழு பொறுப்பு என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் 50 பேர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு ஒரு அதிகாரியை நியமிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2 மணிநேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 8 மண்டலங்களின் பொறுப்பாளர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். தங்களது மண்டலங்களின் உள்ள நிலைமை குறித்து அவரிடம் மந்திரிகளும் விளக்கமாக எடுத்து கூறியுள்ளனர். படுக்கை வசதி இருந்தும், கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் இருந்து வரும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க ஒரு வாரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

பெங்களூருவில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது. ஊரடங்கால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். ஊரடங்கை நீட்டிப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து நிபுணர்கள் முதல்-மந்திரியிடம் அறிக்கை வழங்கியுள்ளனர். ஊரடங்கை நீட்டித்து கொண்டு இருந்தால், அது தொடர்ந்து சென்ற வண்ணம் தான் இருக்கும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அதனால் பெங்களூருவில் ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போது அரசிடம் இல்லை.

இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.

Next Story