அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு கொரோனா


அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 July 2020 4:18 AM IST (Updated: 18 July 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 33 வயது பெண் போலீஸ் கணவருடன் 15 வேலம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக அந்த பெண் போலீஸ் மற்றொரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் போலீஸ் மற்றும் அவருடைய கணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று காலை கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசோதனை

பின்னர் 1-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் அவர்களுடைய 2 குழந்தைகள் உள்பட அருகில் தொடர்பில் இருந்தவர்கள் 30 பேர் மற்றும் பெண் போலீஸ் பணியாற்றிய அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 52 பேர் என மொத்தம் 82 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பெண் போலீஸ் வீடு உள்ள பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அவர் பணியாற்றிய அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் கயிறு கட்டியும், தடுப்பான்கள் வைத்தும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தின் வெளியிலேயே வைத்து கொடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Next Story