புதிதாக 91 பேருக்கு தொற்று பாதிப்பு: கொரோனாவுக்கு இத்தாலி முதியவர் உள்பட மேலும் 3 பேர் பலி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆனது


புதிதாக 91 பேருக்கு தொற்று பாதிப்பு: கொரோனாவுக்கு இத்தாலி முதியவர் உள்பட மேலும் 3 பேர் பலி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆனது
x
தினத்தந்தி 18 July 2020 4:00 AM IST (Updated: 18 July 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆனது. புதிதாக 91 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி,

புதுவையில் நேற்று 856 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 91 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 40 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 39 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 9 பேர் காரைக்காலிலும், 3 பேர் ஏனாமிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,832 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 793 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 1,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேர், ஜிப்மரில் 14 பேர், கொரோனா கேர் சென்டரில் 20 பேர், காரைக்காலில் 2 பேர், மாகியில் ஒருவர் என மொத்தம் 67 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 375, ஜிப்மரில் 200, கோவிட் கேர் சென்டரில் 109, காரைக்காலில் 74, ஏனாமில் 35 என மொத்தம் 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாகி பிராந்தியம் மட்டும் தொற்று இல்லாத பகுதியாக மாறியுள்ளது. இதுவரை 28,995 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 313 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஜிப்மரில் 2 பேர், ஏனாமில் ஒருவர் பலியானார்கள். இவர்களில் இத்தாலியை சேர்ந்த 92 வயது முதியவரும் ஒருவர் ஆவார். புதுவையில் தங்கி இருந்த இவர் கொரோனா பாதிப்பையடுத்து ஜிப்மரில் கடந்த 2-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். ஏற்கனவே அவருக்கு நுரையீரல் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட கோளாறுகள் இருந்தது.

மற்றொருவர் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 83 வயது முதியவர். இவர் ஜிப்மரில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15-ந் தேதி முதல் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் நுரையீரல் பாதித்து ரத்த அழுத்தம் குறைந்து அவர் உயிரிழந்தார்.

ஏனாமை சேர்ந்த 72 வயது மூதாட்டி கடந்த 16-ந் தேதி காக்கிநாடாவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார். அவரை பரிசோதனை செய்தபோது, தொற்று இருப்பது உறுதியானது. சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்கனவே அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. எனவே கொரோனா வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. இவர்களை சேர்த்து புதுச்சேரியில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

எனவே குழந்தைகள், முதியோர் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசின் எளிய நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குழந்தைகள், முதியோர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story