தூத்துக்குடியில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது: கொரோனாவுக்கு அரசு அதிகாரி உள்பட மேலும் 5 பேர் பலி - நெல்லை-தென்காசியில் 184 பேருக்கு தொற்று


தூத்துக்குடியில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது: கொரோனாவுக்கு அரசு அதிகாரி உள்பட மேலும் 5 பேர் பலி - நெல்லை-தென்காசியில் 184 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 18 July 2020 4:00 AM IST (Updated: 18 July 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு அரசு அதிகாரி உள்பட மேலும் 5 பேர் பலியானார்கள். தூத்துக்குடியில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது. நெல்லை, தென்காசியில் 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 4 பேர்.

நெல்லை மாநகர பகுதியில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த 27 வயதுடைய பெண் டாக்டர், அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் டாக்டர், அம்பை வட்டாரத்தை சேர்ந்த 70 வயது டாக்டர், அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 3 போலீஸ்காரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அறை மூடப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முழுவதும் நேற்று காலை எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, ராதாபுரம், களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் 106 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதில் 52 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள். மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.

நெல்லை வள்ளியூரை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக நெல்லை அரசு ஆஸ்பதிரியில் சேர்ந்தார். அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

நெல்லை பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்த 56 வயதுடைய அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 23 ஆக உயர்ந்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 6 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவர், கடையநல்லூரை சேர்ந்த 6 பேர், கீழப்பாவூரை சேர்ந்த 2 பேர், குருவிகுளத்தை சேர்ந்த 10 பேர், மேலநீலிதநல்லூரை சேர்ந்த 10 பேர், சங்கரன்கோவிலை சேர்ந்த 17 பேர், தென்காசியை சேர்ந்த 2 பேர், வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த 17 பேர் இதில் அடங்குவர். அவர்களின் வீடுகளை சுற்றி சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 926 ஆக உயர்ந்துள்ளது.

ஆலங்குளம் மங்கம்மாள் சாலை தெருவை சேர்ந்த 59 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று இறப்பும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில் சிகிச்சை பெற்று இறந்தாலும் தூத்துக்குடி மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் இறந்து உள்ளார். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று மாவட்டத்தில் கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இதில் மாநகராட்சி, கோவில்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 129 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 1339 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story