கதவை திறந்து வைத்து தூங்கிய போது நள்ளிரவில் வீடு புகுந்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


கதவை திறந்து வைத்து தூங்கிய போது நள்ளிரவில் வீடு புகுந்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 18 July 2020 2:11 AM GMT (Updated: 2020-07-18T07:41:49+05:30)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கதவை திறந்து வைத்து தூங்கிய போது நள்ளிரவில் வீடு புகுந்து நகை, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பெரிய பொம்மாஜிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான் (வயது 55). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து குடும்பத்துடன் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று காலை மஸ்தான் எழுந்து பார்த்தபோது, அங்கு பூஜை அறையில் இருந்த 2 பீரோக்களை இரும்பு ராடால் உடைத்து அதிலிருந்த 4 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவை நள்ளிரவில் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் விக்கிரமாதித்தன் (40) என்பவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இந்த இருவேறு திருட்டு சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.

Next Story