திருவையாறு அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்


திருவையாறு அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 July 2020 2:21 AM GMT (Updated: 18 July 2020 2:21 AM GMT)

திருவையாறு அருகே புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று கிராம மக்கள் கருப்பூர் மெயின் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மதுவிழி செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவடியான், கருணாமூர்த்தி, கிராம பிரமுகர்கள் விஜயகுமார், ராமதாஸ், திருஞானசம்பந்தம் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தாசில்தார் இளம்மாருதி, கருப்பூரில் மதுக்கடை திறக்கப்படமாட்டாது என உறுதி அளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story