திருவண்ணாமலை, ஆரணியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி - ஒரே நாளில் 146 பேருக்கு தொற்று
திருவண்ணாமலை, ஆரணியில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கொரோனாவின் தாக் கத்தை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.
துரிஞ்சாபுரம், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், பெருங்கட்டூர், செய்யாறு, ஆக்கூர், அனக்காவூரில் தலா ஒருவர், தச்சூர், சேத்துப்பட்டில் தலா 2 பேர், தண்டராம்பட்டு, தெள்ளாரில் தலா 3 பேர், செங்கத்தில் 4 பேர், போளூர், காட்டம்பூண்டி, கலசபாக்கத்தில் தலா 5 பேர், மேற்கு ஆரணியில் 6 பேர், வெம்பாக்கத்தில் 7 பேர், வந்தவாசி, நாவல்பாக்கத்தில் தலா 12 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 30 பேர், கிழக்கு ஆரணியில் 41 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மற்றும் முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த 61 வயது மூதாட்டி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, கடந்த 14-ந்தேதி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த 50 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 15-ந்தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரணி அரசு மருத்துவமனை சாலையில் கல்லரை தெருவை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story