கூடலூரில் வீடு, நெல் நாற்றுகளை சேதப்படுத்திய காட்டு யானை இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


கூடலூரில் வீடு, நெல் நாற்றுகளை சேதப்படுத்திய காட்டு யானை இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 July 2020 3:52 AM GMT (Updated: 2020-07-18T09:22:17+05:30)

கூடலூரில் வீடு, நெல் நாற்றுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகள் வருகையை தடுக்க வனத்தின் கரையோரம் அகழிகள் தோண்டப்பட்டுள்ளது. இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் விவசாயிகள் நெல் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக வயல்களில் நெற்பயிர்களை நடவு செய்வதற்காக பாத்திகள் அமைத்து விதை நெல்லை தூவி வைத்துள்ளனர். தொடர் மழையால் விதை நெல் நன்கு முளைத்து நாற்றுக்களாக வளர்ந்துள்ளது.ஆடி மாதம் துவங்கியுள்ளதால் வயல்களை சீரமைத்து நாற்று நடவு செய்வதற்கான பணிகளையும் விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

பொதுமக்கள் அச்சம்

இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, அள்ளூர் வயல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை முதுமலை வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

அப்போது அள்ளூர் வயலை சேர்ந்த மணி என்பவரின் வீட்டு பின் பக்கம் அமைத்து இருந்த சமையல் அறையின் மேற்கூரையை காட்டு யானை திடீரென உடைத்தது. இதனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர்.

நெல் நாற்றுகளை மிதித்து சேதப்படுத்தியது

இதனால் யானை அங்கிருந்து சென்றது. பின்னர் மணி, சுகுமாறன், தாமோதரன் உள்ளிட்ட பல விவசாயிகளின் நிலத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கு பயிரிட்டு இருந்த நெல் நாற்றுகளை மிதித்து சேதப்படுத்தியது. பின்னர் விடியற்காலை வரை அப்பகுதியில் நின்றிருந்த யானை அதன்பின்னர் முதுமலை வனத்துக்குள் சென்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

நள்ளிரவு முதல் யானையின் நடமாட்டம் இருந்தது. இது போல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வனத்துறையினர் வந்து விரட்டினாலும் எந்த பயனும் ஏற்படுவது இல்லை. யானைகள் நடமாட்டம் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு தங்கள் நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

ஆனால் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய தீர்வு காண வேண்டும். இல்லை எனில் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.

Next Story