அம்மன்கோவில்களில் சிறப்பு அபிஷேகம் கொரோனாவால் களையிழந்த ஆடி வெள்ளி


அம்மன்கோவில்களில் சிறப்பு அபிஷேகம் கொரோனாவால் களையிழந்த ஆடி வெள்ளி
x
தினத்தந்தி 18 July 2020 11:13 AM IST (Updated: 18 July 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் நடவடிக்கையால் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை களையிழந்தது. மேலும் கிராமப்பகுதிகளில் உள்ள ஒரு சில அம்மன்கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அரியலூர்,

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு சிறந்த மாதமாகும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைக்கட்டும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் நாளை பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆடி மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதத்தில் அம்மனை நாடி சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன் கள் கிடைக்கும் மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று நாகபாம்பிற்கு பால் வார்த்து குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளிக்கிழமை அன்று இனிப்பு, தேங்காய், உப்பு, காரப் பருப்பு கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்யப்படுகிறது. 2-ம் வெள்ளிக்கிழமை அன்று பருப்பு பாயசமும், உளுந்து வடையும் செய்து நிவேதிக்க, 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கலும், 4-ம் வெள்ளிக்கிழமை அன்று ரவா கேசரியும் செய்து படைக்கலாம். பொதுவாக 5-ம் வெள்ளிக்கிழமை பால் பாயசம் செய்யலாம்.

ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூர் மேலத்தெருவில் உள்ள படை பத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்பாளுக்கு பால், பன்னீ, இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த கவரப்பாளையம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரியலூர் மாவட்டத்திலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் கிராமப்பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களில் மட்டும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மற்ற கோவில்களில் நடை திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்தது. இதனால் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடையே களையிழந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story