சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 113 பேருக்கு தொற்று: கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது


சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 113 பேருக்கு தொற்று: கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 18 July 2020 12:52 PM IST (Updated: 18 July 2020 12:52 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 113 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,926 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் செஞ்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மற்றும் சத்தியமங்கலம் கிராம உதவியாளர், செஞ்சி தபால் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர், திண்டிவனம் அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் 5 ஊழியர்கள் உள்பட 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

2 ஆயிரத்தை தாண்டியது

இதையடுத்து பாதிக்கப்பட்ட இவர்கள் 113 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,926-ல் இருந்து 2,039 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நேற்று 38 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை சிகிச்சை பலனின்றி 26 பேர் பலியாகி உள்ளனர்.

பொதுமக்கள் பீதி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதியன்று கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய நிலையில் 2 வார காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னும் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதனை தவிர்க்க நோய் தடுப்பு நடவடிக்கை பணியை மாவட்ட நிர்வாகம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story