உடுமலை அருகே அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் 42 அடியை கடந்தது


உடுமலை அருகே அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு நீர்மட்டம் 42 அடியை கடந்தது
x
தினத்தந்தி 18 July 2020 11:19 PM GMT (Updated: 18 July 2020 11:19 PM GMT)

உடுமலை அருகே அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 42 அடியை கடந்தது.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக்கொண்ட இந்த அணைக்கு மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

பருவ காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தையும் அன்றைய நிலையில் அணையில் உள்ள நீர் இருப்பை கொண்டும் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நிலங்களை உழுது நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை சாகுபடி பரவலாக நடைபெற்றாலும் கூட அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாக உள்ளது.

மேய்ச்சல் நிலமானது

கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அணையின் நீராதாரங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. மாறாக கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் அணைக்கு ஆறுகள் மூலமாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்று விட்டது. மறுபுறம் பாசனம் மற்றும் குடிநீருக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர் இருப்பும் சரிந்து விட்டது.

அதன் பின்பு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை. இதனால் அணைப்பகுதி மணல் திட்டுகளாகவும், பாறைகளாகவும் வறண்ட நிலமாகவும் வனவிலங்குகளின் மேய்ச்சல் நிலமாகவும் காட்சி அளித்து வந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல்மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதன்காரணமாக அணைக்கு கடந்த 18 நாட்களில் சராசரியாக வினாடிக்கு 285 கனஅடி வரையிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மட்டும் 5,139 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்துள்ளது. இதனால் கடந்த 1-ந்தேதி 31.24 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 18 நாட்களில் 11 அடி உயர்ந்து நேற்றுகாலை நிலவரப்படி 42.65 அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீராதாரங்களில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருவதாக கூறப்படுகிறது. அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்தால் பாசனத்திற்கு திறந்து விடப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த நீர் இருப்பில் 42.65 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 561 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

Next Story