காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு யானை திரும்பியது - மேளதாளத்துடன் பக்தர்கள் வரவேற்பு


காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு யானை திரும்பியது - மேளதாளத்துடன் பக்தர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 19 July 2020 4:45 AM IST (Updated: 19 July 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு யானை மீண்டும் திரும்பியது. யானையை மேளதாளத்துடன், மலர்தூவி பக்தர்கள் வரவேற்றனர்.

புதுச்சேரி, 

புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் பக்தர்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து ஆசி பெறுவது வழக்கம்.

கேரளாவில் காட்டு யானை பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் கோவில்களில் உள்ள யானைகளை வனம் போன்ற பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் மையத்திற்கு கடந்த ஜூன் 8-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானையை பாகன்கள் பராமரித்து வந்தனர்.

இந்தநிலையில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் மீண்டும் யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டுவர வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டு வரவும், உரிய சிகிச்சை அளித்து பராமரிக்கவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் 40 நாட்களுக்குப் பின் நேற்று காலை 7.30 மணிக்கு வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து யானை லட்சுமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து ஆங்காங்கே பக்தர்கள் யானை லட்சுமியுடன் நடந்து வந்தனர்.

நேரு வீதி வழியாக வந்தபோது யானை லட்சுமியை மேளதாளங்களுடன், மலர் தூவி வரவேற்றனர். கோவிலில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் யானை லட்சுமியை பழங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். காலை 10.30 மணி அளவில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட யானை லட்சுமி அங்கு மணக்குள விநாயகரை வணங்கி விட்டு வலம் வந்தது. இதன்பின் யானைக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story