புதிதாக 58 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - 4 நாட்களில் 10 பேர் உயிரிழப்பு


புதிதாக 58 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - 4 நாட்களில் 10 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 July 2020 10:15 PM GMT (Updated: 19 July 2020 12:49 AM GMT)

புதுச்சேரியில் நேற்று 2-வது நாளாக கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். இவர்களை சேர்த்து கடந்த 4 நாட்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் நேற்று 801 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 58 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது உறுதியானது. இதில் 39 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 12 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 7 பேர் ஏனாமிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலத்தில் தொற்றால் இதுவரை 1,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,066 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 398, ஜிப்மரில் 197, கொரோனா கேர் சென்டரில் 93, காரைக்காலில் 74, ஏனாமில் 38 என மொத்தம் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 29,851 மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 302 பரிசோதனைகளுக்கு முடிவு வர வேண்டி உள்ளது.

கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேர், புதுவை அரசு பொது மருத்துவமனையில் ஒருவர் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் லாஸ்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் ஒருவர் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 13-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய் தீவிரமடைந்து நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்றொருவரான கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த 76 வயது ஆண் ஒருவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் பாதிப்பு இருந்தது. இந்தநிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ந் தேதி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

கவிக்குயில் நகரை சேர்ந்த 42 வயது ஆண் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சட்டசபை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த நாட்களில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story