சம்பள உயர்வு உள்ளிட்ட ஆஷா ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - எடியூரப்பாவுக்கு, சித்தராமையா கடிதம்
சம்பள உயர்வு உள்ளிட்ட ஆஷா ஊழியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;-
பெங்களூரு,
ஆஷா திட்ட ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். ஆஷா திட்ட ஊழியர்கள் கடந்த 10-ந் தேதியில் இருந்து பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா தடுப்பு பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆஷா ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் தங்களது சம்பளத்தை ரூ.12 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தங்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு அலட்சியமாக இருக்காமல் ஆஷா ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு முன்பாக ஏப்ரல் மாதம் ஆஷா ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் 50 சதவீத ஆஷா ஊழியர்களுக்கு அந்த ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதுபற்றி எனது கவனத்திற்கும் வந்தது. ஆஷா ஊழியர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
பட்ஜெட்டில் ஆஷா ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆஷா ஊழியர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகளும் நிறைவேற்றப்படவில்லை. எனவே அவர்களது நியாயமான கோரிக்கையான சம்பள உயர்வு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை இனியும் தாமதிக்காமல் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story