குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் - கலெக்டர் தகவல்


குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 July 2020 10:15 PM GMT (Updated: 19 July 2020 1:44 AM GMT)

குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டாவில் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி காணப்படுவோர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன. கொரோனா தொற்று பாதித்தநபர்கள் வசித்த பகுதிகளில் பிறருக்கு தொற்று உள்ளதா என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 1,452 முகாம்கள் நடத்தப்பட்டு, 56,542 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா அறிகுறி காணப்பட்ட 26,548 நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டுள்ளன.

சித்த மருத்துவத்தின் மூலம் முதற்கட்டமாக பெறப்பட்ட மருந்துகள் 1,000 பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று ஆயுர்வேத மருந்துகளும் முதற்கட்டமாக 1,000 போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதை படிப்படியாக அதிகரித்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தொற்று தடுப்பு களப்பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவை மாவட்டம் முழுவதும் 31 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளும் 30,450 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்று குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சியில் அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா பகுதிகளில் நாளை முதல் மருந்துகடைகள், பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் காய்கறி, மளிகை, இறைச்சி, மீன், துணி, ஹார்டுவேர், நகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரி, டீக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் பொருந்தும். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் முழுஊரடங்கு மாவட்டம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும். மருந்துகடைகள், பெட்ரோல் பங்குகள் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கலாம். இந்த 3 பகுதிகளை தவிர்த்து மாவட்டத்தின் பிறபகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Next Story