சுருக்குமடி வலையை பயன்படுத்திய மீனவரின் படகு தீ வைத்து எரிப்பு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு


சுருக்குமடி வலையை பயன்படுத்திய மீனவரின் படகு தீ வைத்து எரிப்பு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு
x

பூம்புகாரில், சுருக்குமடி வலை பயன்படுத்திய மீனவரின் படகு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையொட்டி அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம் பூம்புகார் பகுதி மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் சுருக்குமடி வலைக்கு எதிராகவும் பல கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மீனவ கிராமங்கள் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர் போராட்டங்களையடுத்து அரசு, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

படகு தீ வைத்து எரிப்பு

இந்த நிலையில் பூம்புகார் சுனாமி நகரை சேர்ந்த பரசுராமன் மகன் ரஞ்சித்(வயது 29) என்ற மீனவர், தனது பைபர் படகை பூம்புகார் கடற்கரை காவிரி சங்கமத்துறை அருகே நிறுத்தி வைத்திருந்தார். சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வந்த ரஞ்சித்தின் படகை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதில் படகு மற்றும் அதில் இருந்த என்ஜின், வலை ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனால் பூம்புகார் மீனவர் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.

போலீசார் குவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பதற்றம் நிலவும் பகுதியில் சூப்பிரண்டு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மீனவரின் படகு தீ வைத்து எரிக்கப்பட்டதால், மற்ற மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story