தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2020 9:30 AM IST (Updated: 19 July 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் பிரதீப்யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்பு அலுவலர் பிரதீப்யாதவ் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுக்கும் இடங்கள், வெளியூர்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வரும் நபர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட் போன்ற கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள இடங்களில் தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்துதல், தற்காலிக சிகிச்சை மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை தயார்படுத்துதல் ஆகியவை குறித்து கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

அபராதம் விதிக்க வேண்டும்

பின்னர் அவர் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்திடுமாறும், வெளியூர்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்து பரிசோதனை செய்யாமல் இருப்பவர்களை வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணியினை தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தினார். முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், கிருமிநாசினி மற்றும் கைகழுவும் அமைப்பு ஏற்படுத்தாத வணிக நிறுவனங்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்திடுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து தஞ்சை மாநகராட்சி கோரிகுளம் பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப்யாதவ், பொதுமக்களுக்கு செய்யப்படும் பரிசோதனை முறை குறித்து கேட்டறிந்தார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story