கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை


கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 19 July 2020 4:46 AM GMT (Updated: 19 July 2020 4:46 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பேரூர்,

முக்தி தலம் என்று அழைக்கப்படும் பேரூரில் புகழ்பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில் (காஞ்சிமாநதி) படித்துறை உள்ளது. இந்த ஆற்றின் படித்துறையில் இறந்தவர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், அவர்கள் ஈசனிடம் சென்றுவிடுவார்கள் என்பதும் ஐதீகம்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று இந்த படித்துறையில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க ஏராளமான பக்தர்கள் வந்து திதி கொடுத்து தர்ப்பண பூஜை செய்வது உண்டு. இதற்காக முந்தைய நாளே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பேரூருக்கு வந்து விடுவார்கள்.

ஆடிஅமாவாசை

இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளையும் (திங்கட்கிழமை), ஆடிப்பெருக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதியும் வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்குக்கு ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அன்றைய தினம் அங்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பேரூர் படித்துறையில் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

அனுமதி இல்லை

அந்த அறிவிப்பு பலகையில், வருகிற 20-ந் தேதி (நாளை) ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு சொந்தமான வெள்ளிக்கிழமை அம்மன் தோப்பு பகுதி மற்றும் ஆற்றுமேடை விநாயகர் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் முன்னோர்களுக்கு வழங்கக்கூடிய தர்ப்பணமும், பரிகார பூஜைகளுக்கும் அனுமதி இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. 

Next Story