ஆந்திராவில் இருந்து கேரளா செல்ல இ-பாஸ் பெற்று அனுமதியின்றி பயணிகளை ஏற்றி சென்ற ஆம்னி பஸ் பறிமுதல் டிரைவர் கைது


ஆந்திராவில் இருந்து கேரளா செல்ல இ-பாஸ் பெற்று அனுமதியின்றி பயணிகளை ஏற்றி சென்ற ஆம்னி பஸ் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 July 2020 4:52 AM GMT (Updated: 19 July 2020 4:52 AM GMT)

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கி கொண்டு தமிழகத்தில் அனுமதியின்றி பயணிகளை ஏற்றி சென்ற ஆம்னி பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போத்தனூர்,

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அங்கு செல்வதற்கும், அங்கிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் செல்வதற்கும் இ-பாஸ் எளிதாக கிடைக்காது. இதை பயன்படுத்தி கேரளாவில் உள்ள ஒரு ஆம்னி பஸ் நிறுவனம் சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு பயணிகளை ஏற்றி செல்கிறோம் என்று சமூக வலைத்தளத்தில் அறிவித்தது.

இதை நம்பி பலர் அந்த ஆம்னி பஸ்களில் பயணம் செய்து வந்தனர். இது குறித்த தகவல் கோவை மாவட்ட போலீசாருக்கு கிடைத்தது. இதுகுறித்து விசாரித்ததில் தமிழகத்திற்குள் வரும் வெளிமாநில பஸ்கள் எந்தவித அனுமதியும் இன்றி பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. எனவே அந்த ஆம்னி பஸ் டிரைவரை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

டிரைவர் கைது

இதை தொடர்ந்து முகநூலில் உள்ள செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். மறுமுனையில் பேசிய நபரிடம் கோவையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு செல்ல வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். முதலில் மறுத்த அந்த ஆம்னி பஸ் நிர்வாகத்தினர் பிறகு ஒப்புக்கொண்டு கோவையை அடுத்த க.க.சாவடி அருகே காத்திருக்கும்படி கூறினார்கள்.

அதன்படி கோவை போலீசார் சாதாரண உடையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஆம்னி பஸ்சை போலீசார் மடக்கியதுடன், அந்த பஸ் டிரைவர் முகமது ஷபத் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2,500 கட்டணம்

விசாரணையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பஸ்சில் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு பயணிகள் செல்ல இ-பாஸ் வாங்கி உள்ளனர். தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் பஸ்சை நிறுத்தி ஆட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. ஆனால் விதிமுறைகளை மீறி ஆந்திராவில் இருந்து பயணிகளை ஏற்றாமல், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பயணிகளை ஏற்றி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை என்று பல இடங்களில் பயணிகளை இறக்கியும், ஏற்றியும் உள்ளனர். ஒரு பயணிக்கு அதிகபட்சமாக ரூ.2,500 வரை கட்டணமாக பெற்றும் உள்ளனர். எனவே இதுவரை எத்தனைபேரை இதுபோன்று அழைத்துச்சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story