கொரோனா பாதிப்பால் பலியான அப்துல்கலாம் நண்பர் உருவப்படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி


கொரோனா பாதிப்பால் பலியான அப்துல்கலாம் நண்பர் உருவப்படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 19 July 2020 5:01 AM GMT (Updated: 19 July 2020 5:01 AM GMT)

கொரோனா பாதிப்பால் பலியான முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பர் உருவப்படத்துக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றதால் ஊட்டி அருகே கடநாடு கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 90 வயது முதியவரான போஜன் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் போஜன் தனது கல்லூரி படிப்பை திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முடித்தார். அப்போது கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பயின்றார். அந்த சமயத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடன் நெருங்கிய நண்பராக பழகினார். அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, கடந்த 2006-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது போஜனை சந்தித்து பேசினார். கல்லூரி நட்பை புதுப்பிக்கும் பொருட்டு போஜன் அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கல்லூரியில் படிக்கும்போது நடந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மக்கள் அஞ்சலி செலுத்தினர்

அப்துல்கலாம் தொடங்கி வைத்த பெண் குழந்தைகள் கல்விக்கான தனியார் தொண்டு நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இதன் மூலம் மருத்துவம், என்ஜினீயரிங் என 50 மாணவ- மாணவிகள் இலவசமாக கல்வி பயின்று வந்தனர். திடீரென அவர் கொரோனா பாதிப்பால் இறந்து விட்டதால் 50 பேர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

அப்துல்கலாமின் நண்பர் இறந்தது கடநாடு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கிராமத்தில் பொதுமக்கள் உயிரிழந்த போஜன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். நீலகிரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story