ஊட்டியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை: ஒரே நாளில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


ஊட்டியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை: ஒரே நாளில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 19 July 2020 5:04 AM GMT (Updated: 19 July 2020 5:04 AM GMT)

ஊட்டியில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 47 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று உறுதியான 371 பேரில், 116 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 254 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் ஊட்டியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு அதிகரிப்பால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஊட்டியில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகள் வழங்குவதுடன், சித்த மருத்துவமும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஊட்டி தனியார் பள்ளி மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஊட்டி பெர்ன்ஹில் ரவுண்டானா அருகே உள்ள கொரோனா சிகிச்சை மையமான தனியார் பள்ளியில் குணமடைந்தவர்கள் வீட்டிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த ஆண்கள், பெண்கள் என 47 பேருக்கு பழங்கள், முகக்கவசம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தயாரிப்பதற்கான பொடி ஆகியவற்றை வழங்கினார்.

47 பேர் குணமடைந்தனர்

அவர்களிடம் வீடுகளில் தொடர்ந்து 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் குணமடைந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து பணியாற்றி வருகின்றது.

இன்று (அதாவது நேற்று) சிகிச்சை முடிந்து கொரோனா நோயாளிகள் 47 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 163 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவது மாவட்ட நிர்வாகத்துக்கும், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள நபர்களும் விரைவில் பூரண குணமடைந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story