திருச்செந்தூர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவிகள் சேர்க்கை - விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியானது பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களால் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கடந்த 33 ஆண்டுகளாக ஒழுக்கம் நிறைந்த தரமான கல்வியை வழங்கி வருகிறது. அனுபவம் மிக்க பேராசிரியைகளால் பயிற்றுவிக்கப்படும் மாணவிகள் தொடர்ந்து கல்வியில் பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்து வருகிறார்கள். கடந்த கல்வியாண்டில் 49 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இதில் 5 மாணவிகள் முதலிடம் பெற்று பல்கலைக்கழகம் வழங்கும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.
இந்த கல்லூரி சிறந்த நூலக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, விடுதி வசதி மற்றும் பஸ் வசதிகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளாக பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளாக பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணிப்பொறியியல், பி.சி.ஏ. (கணினி பயன்பாட்டியல்), இளம் வணிகவியல் பி.காம் (2 பிரிவு), பி.பி.ஏ. என 11 இளநிலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
முதுநிலை பாடப்பிரிவுகளாக எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், கணிப்பொறியியல், எம்.காம் என 6 பிரிவுகளும் ஆராய்ச்சி படிப்புகளாக வணிகவியல் ஆய்வியல் நிறைஞர், பி.எச்டி. கணிதம் உள்ளன.
இந்த கல்லூரியில் 2020-21-ம் ஆண்டு மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்ப படிவம் www.gacw.in என்ற கல்லூரி இணையதளத்தின் வழியாக வழங்கப்படுகிறது. கல்லூரியில் சேர விரும்பும் தகுதி பெற்ற மாணவிகள் இந்த இணையதளத்திற்குள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை ஸ்கேன் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) ஆகும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242184, 220525, 220529 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story