தூத்துக்குடியில், இன்று ஆடி அமாவாசைக்கு 5 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேட்டி
தூத்துக்குடியில் ஆடி அமாவாசை தினமான இன்று(திங்கட்கிழமை) 5 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனை முழுமையாக அமல்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் உள்ள சந்திப்புகளில் தடைகளை ஏற்படுத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே திடீரென வந்தார். அப்போது, பாளையங்கோட்டை ரோட்டில் முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை போலீசார் மடக்கி நிறுத்தி வைத்திருந்தனர்.
அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களை உடனடியாக அவர் அனுப்பி வைத்தார். மற்றவர்களுக்கு கொரோனா வைரசின் தாக்கம் குறித்தும், இதனால் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார். இனிமேல் இது போன்று ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றித்திரியக்கூடாது. உடனடியாக வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆடி அமாவாசை தினமான இன்று(திங்கட்கிழமை) 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. அதற்காக தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. போலீசாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். முககவசம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும், கபசுரகுடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் சாப்பிட அறிவுறுத்தி உள்ளோம்.
சாத்தான்குளம் தொடர்பாக சிறு, சிறு புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். இதில் ஏதேனும் தவறுகள் நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story