திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 July 2020 3:45 AM IST (Updated: 20 July 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகவே காணப்படுகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஜமுனாமரத்தூர், வேட்டவலம், தண்டராம்பட்டை ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கும், செங்கம், அக்கூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும், புதுப்பாளையம், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதியில் தலா 3 பேருக்கும், சேத்துப்பட்டில் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் தச்சூர், போளூர் ஆகிய பகுதிகளில் 7 பேருக்கும், நாவல்பாக்கத்தில் 11 பேருக்கும், பெருங்கட்டூரில் 19 பேருக்கும், வந்தவாசியில் 29 பேருக்கும், கிழக்கு ஆரணியில் 31 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,912 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று சுகாதார துறையினர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

போளூர் கண்ணன் நகரில் வசிக்கும் குழந்தை பிறந்து 7 நாட்களேயான 26 வயது இளம்பெண், நரசிம்மன் தெருவில் ஒரு பெண், நேரு தெருவில் கணவன்-மனைவி, மகன், ஆண்டாள் நகரில் ஒரு ஆண், எஸ்.எம்.டி. நகரில் வாலிபர், கரைப்பூண்டியை சேர்ந்த ஒருபெண், செங்குணத்தை சேர்ந்த ஒரு ஆண் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை, அத்தியந்தல், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வசித்த பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் முகமதுரிஜ்வான் மேற்பார்வையில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அடைக்கப்பட்டது.

மேலும் போளூருக்கு வந்த ரெய்ப்பூரில் இருந்து ராணுவவீரர், ராஜஸ்தானில் இருந்து வந்த ரெயில்வே ஊழியர், ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் மாணவர் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 14 பேர் வந்தனர். இவர்களை தாசில்தார் ஜெயவேல் வெண்மணி, மொடையூர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் கல்லூரில் தனிமைப்படுத்தி வைத்தார். இதனையடுத்து அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் மேற்பார்வையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story