வாணியம்பாடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு - உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை


வாணியம்பாடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு - உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 20 July 2020 3:15 AM IST (Updated: 20 July 2020 7:13 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 19). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆயிஷா திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை உறவினர்கள் காதர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். மயங்கிய நிலையில் இருந்ததால் டாக்டர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து ஆட்டோவில் இருந்த ஆயிஷாவை பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து உறவினர்கள் ஆயிஷாவின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி டவுன் போலீஸ்இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், துணை தாசில்தார் கவுரிசங்கர், வருவாய் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இளம்பெண் திடீரென இறந்ததால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற கோணத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, ஆயிஷா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கூறினார். அதற்கு உறவினர்கள் மறுத்ததால் இறுதி சடங்கு முடிந்த பின்னர் உறவினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story