மேலும் 2 பேர் பலி: குமரியில் புதிதாக 111 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,530 ஆக உயர்ந்தது


மேலும் 2 பேர் பலி: குமரியில் புதிதாக 111 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,530 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 20 July 2020 9:37 AM IST (Updated: 20 July 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் மேலும் இரண்டு பேர் கொரோனாவுக்கு பலியானார். நேற்று புதிதாக 111 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 2,530 ஆக உயர்ந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பும், பரவலும் அதிவேகமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2419 ஆக இருந்தது.

அவர்களில் 1300-க்கும் மேற்பட்டோர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி, தனியார் பள்ளி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, தக்கலை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தநிலையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு நோய்களும் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுபோல், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பெண் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் நேற்றும் குமரி மாவட்டத்தில் புதிதாக 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 109 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டவர்கள். அதில் ஆண்கள் 46 பேர், பெண்கள் 54 பேர், சிறுவர்கள் 9 பேர் அடங்குவர். இதுதவிர நாகர்கோவிலில் உள்ள தனியார் பரிசோதனை மூலம் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2530 ஆக உயர்ந்துள்ளது.

Next Story