திருக்கோவிலூர் அருகே பயங்கரம் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை டிரைவர் கைது


திருக்கோவிலூர் அருகே பயங்கரம் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 July 2020 5:27 AM GMT (Updated: 20 July 2020 5:27 AM GMT)

திருக்கோவிலூர் அருகே கல்லால் தாக்கி கல்லூரி மாணவரை கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் மனோஜ் (வயது 21). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மனோஜ் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித்தரக்கோரி, மரூர் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ஸ்டீபன்(27) என்பவரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் ஸ்டீபன் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து மனோஜ், ஸ்டீபனிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொடுங்கள், இல்லையேல் ரூ.8 ஆயிரத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார்.

கல்லால் தாக்கினார்

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டீபன், மனோஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மனோஜை ஸ்டீபன், ஒரு மோட்டார் சைக்கிளில் மாடாம்பூண்டி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் மனோஜூக்கு ஸ்டீபன் மது வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மனோஜூக்கு போதை தலைக்கு ஏறியது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஸ்டீபன் அருகில் இருந்த கல்லை எடுத்து மனோஜின் தலைப்பகுதியில் தாக்கினார். பின்னர் அவரது கழுத்தில் தனது காலால் நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு ஸ்டீபன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் மனோஜ், வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து தேடினர். அப்போது, மனோஜ், ஸ்டீபனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தேடிப்பார்த்தபோது, மாடாம்பூண்டி காப்புக்காட்டில் மனோஜ் பிணமாக கிடந்தார்.

கார் டிரைவர் கைது

இதற்கிடையே இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வம் திருக்கோவிலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகனை ஸ்டீபன் கொலை செய்துள்ளார் என்று கூறியிருந்தார். இதையடுத்து ஸ்டீபனை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மனோஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து ஸ்டீபனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story