பண்ருட்டி அருகே பரிதாபம் செங்கல் சூளை குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி


பண்ருட்டி அருகே பரிதாபம் செங்கல் சூளை குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி
x
தினத்தந்தி 20 July 2020 5:52 AM GMT (Updated: 20 July 2020 5:52 AM GMT)

பண்ருட்டி அருகே செங்கல்சூளை குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு புதுக்காலனி 2-வது தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார் கூலித்தொழிலாளி. இவரது மகன்ஆதித்யா(வயது 10), இதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரின் மகள் பாரதி(6). அங்குள்ள பள்ளியில் ஆதித்யா 5-ம் வகுப்பும், பாரதி 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த நிலையில் நேற்று காலை தங்களது அத்தை சுமதியுடன் ஆடு மேய்ப்பதற்கு சென்றனர். அப்போது ஏ.கே.பாளையத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்ட குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில் ஆதித்யாவும், பாரதியும் தவறி விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுமதி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் எழுப்பினார்.

பரிதாப சாவு

இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடோடி வந்து குட்டையில் மூழ்கிய ஆதித்யா, பாரதி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதையடுத்து இருவரின் உடலையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிண அறையில் இருவரின் உடல்களும் வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்சூளை உரிமையாளர் எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (46) என்பவரை தேடி வருகிறார்கள்.

முன்னதாக குட்டையில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியான சம்பவத்தை அறிந்து பண்ருட்டி தாசில்தார் உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஆகியோர் சம்பவம் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Next Story