சாத்தான்குளம் சம்பவம்: அரசு டாக்டர் வெண்ணிலாவிடம் மருத்துவ அதிகாரி திடீர் விசாரணை


சாத்தான்குளம் சம்பவம்: அரசு டாக்டர் வெண்ணிலாவிடம் மருத்துவ அதிகாரி திடீர் விசாரணை
x
தினத்தந்தி 20 July 2020 5:44 PM GMT (Updated: 20 July 2020 7:06 PM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகனுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர் வெண்ணிலாவிடம், மருத்துவ அதிகாரி நேற்று திடீர் விசாரணை நடத்தினார்.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக 10 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்கு முன்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த அரசு பெண் டாக்டர் வெண்ணிலா, 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினார். இதுதொடர்பாக அவரிடம் ஏற்கனவே மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி உள்ளார்.

இதையடுத்து டாக்டர் வெண்ணிலாவிடம் தூத்துக்குடி மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பொன் இசக்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால், வெண்ணிலா விடுப்பில் சென்று விட்டார். அவர் வந்த பின்னர் விளக்கம் கொடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணன் நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அங்கு டாக்டர் வெண்ணிலாவும் வரவழைக்கப்பட்டு இருந்தார். அவரிடம், கிருஷ்ணன் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டார். அதாவது எதன் அடிப்படையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ சான்றிதழ் கொடுத்தீர்கள்? என்று விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணை மதியம் 1 மணி வரை நடைபெற்றது. சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு டாக்டர் வெண்ணிலா அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். இந்த விசாரணையின்போது சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ஆத்திக்குமார் உடன் இருந்தார்.

Next Story