ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி டாக்டர் தற்கொலை உடுமலையை சேர்ந்தவர்


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி டாக்டர் தற்கொலை உடுமலையை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 21 July 2020 4:16 AM IST (Updated: 21 July 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கல்லூரி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இவரது சொந்த ஊர் உடுமலை ஆகும்.

பெரம்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கண்ணன் (வயது 25). இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து, பயிற்சி டாக்டராக இருந்து வந்தார். ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்த கண்ணன், நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் பணி முடிந்து விடுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கண்ணன் திடீரென விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பயிற்சி டாக்டர் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

பணி சுமை காரணமா?

இதுகுறித்து சென்னை ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக், உதவி கமிஷனர் பாலகிருஷ்ணன் பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பயிற்சி டாக்டர் கண்ணனுக்கு தொடர்ந்து ஒரு வாரமாக இரவு பணி வழங்கப்பட்டதால் பணிசுமை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கண்ணனுக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு பெண் பார்ப்பதாக தெரிகிறது. திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவருடன் பணியாற்றும் சக பயிற்சி டாக்டர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story