ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச மின்சாரம் - சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச மின்சாரம் - சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 July 2020 4:57 AM IST (Updated: 21 July 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை நேற்று காலை 9.45 மணிக்கு தொடங்கியது.
கவர்னர் உரை இடம்பெறாததால் 5 நிமிடத்தில் அதாவது 9.50 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 12.05 மணியளவில் மீண்டும் சபை கூடியது. அப்போது 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.2 ஆயிரம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச அரிசி, விவசாயிகளுக்கு மானியமாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்கியது.

கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதே அரசின் தலையாய நோக்கம். தொழில் முடக்கம், நிதி தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மாநிலத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 15-வது நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. தற்போது மத்திய அரசின் உதவி ரூ.1,700 கோடியாக உள்ளது. நிதிக் கமிஷனில் சேர்ப்பதன் மூலம் ரூ.2,800 கோடி கிடைக்கும்.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு புதுச்சேரி போன்ற நுகர்வோர் மாநிலங்களுக்கான இழப்பு அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்கும் வருவாய் மாநில அரசுக்கு போதுமானதாக இல்லை. அரசின் ஆரம்ப கால கடன் ரூ.2,177 கோடிக்கு வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கிராமப்புற தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருளாதார ரீதியாக அவர்களின் வருமானத்தை பெருக்க வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகளுடன் பலமுறை கூட்டம் நடத்தி புதுச்சேரி ஆட்சி பரப்பில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வங்கி கடன் வழங்குவது தொடர்பாக நல்ல முடிவுகளை எடுத்துள்ளோம்.

2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.9 ஆயிரம் கோடியாக இருக்கும். இதில், ரூ.1,966 கோடி சம்பளத்துக்கும், ரூ.1,177 கோடி ஓய்வூதியத்துக்கும் போய் விடும். கடனுக்கான வட்டியாக ரூ.1,625 கோடியும், மின்சாரத்துக்கு ரூ.1,525 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.896 கோடி, தன்னாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு ரூ.864 கோடி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், விவசாய பண்ணை கருவிகள் வாங்குதல், தோட்டக்கலை காடு வளர்ப்பு, பால் பண்ணை திட்டம், கோழி வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ரூ.1,703 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மேம்பட ரூ.836 கோடியும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.250 கோடியும், கல்விக் கடனுக்காக ரூ.86 கோடியும், வீடுகள் கட்ட ரூ.217 கோடியும் என ரூ.3,281 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.

இந்த பட்ஜெட்டில் நம்மாழ்வார் வேளாண் புத்தாக்க திட்டம், பண்டித ஜவகர்லால் நேரு கால்நடை புத்தாக்க திட்டம், தேசப்பிதா மகாத்மா காந்தி பால் உற்பத்தி மேம்பாட்டு திட்டம், மேம்படுத்தப்பட்ட டாக்டர் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்து திட்டம், பெருந்தலைவர் காமராஜர் மாணவர் நல நிதி திட்டம், அனைவருக்குமான அன்னை இந்திரா காந்தி மருத்துவ காப்பீட்டு திட்டம், தந்தை பெரியார் கிராமப்புற மகளிர் மறுமலர்ச்சி திட்டம், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் மீனவர் புத்தாக்க திட்டம், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம், தேசப்பிதா மகாத்மா காந்தி கல்வி நகர திட்டம் போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிநீருக்கான வரி ரத்து செய்யப்பட்டு விலையில்லா இலவச குடிநீர் வழங்கும் திட்டம், பிரதிமாதம் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் உபயோகிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவோம். இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

Next Story