தேனியில் கடையடைப்பு முடிவை கைவிட்டு மீண்டும் கடைகளை திறந்த வியாபாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிருப்தி


தேனியில் கடையடைப்பு முடிவை கைவிட்டு மீண்டும் கடைகளை திறந்த வியாபாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிருப்தி
x
தினத்தந்தி 21 July 2020 12:34 AM GMT (Updated: 21 July 2020 12:34 AM GMT)

தேனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட அதிருப்தியால் கடையடைப்பு முடிவை பாதியில் கைவிட்டு வியாபாரிகள் மீண்டும் கடைகளை திறந்தனர். இதனால் நகரில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

தேனி,

தேனி நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடைகளையும் அடைக்க கடந்த வாரம் வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர். கடந்த 14-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையும், 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையும் என வியாபாரிகள் சங்கங்களால் இருவேறு முடிவுகள் எடுக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.

கடைகள் முழுமையாக அடைக்கப்பட்ட போதிலும் நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. அன்றாடம் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பலர் உலா வந்தனர். அவர்கள் மீது கொரோனா தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.

மீண்டும் கடைகள் திறப்பு

இதையடுத்து நகரில் கடையடைப்பு முடிவை வியாபாரிகள் பாதியில் கைவிட்டு, நேற்று கடைகளை திறந்தனர். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் கடற்கரை நாடார் வீதி உள்ளிட்ட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சாலைகளிலும் வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரத்தில் மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலை ஆகிய இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் சிலரிடம் கேட்டபோது, “கடைகளை முழுமையாக அடைத்ததால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இருப்பினும், கொரோனா தடுப்பு பணிக்காக இந்த சிரமத்தை ஏற்றுக் கொண்டோம். ஆனால், கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தவில்லை. வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக ஒத்துழைப்பு கொடுத்த போதிலும், தேவையின்றி மக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததாலும், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் முன்கூட்டியே கடைகளை திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றனர்.

Next Story