தஞ்சையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்


தஞ்சையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 21 July 2020 1:22 AM GMT (Updated: 21 July 2020 1:22 AM GMT)

தஞ்சையில், பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

தஞ்சாவூர்,

தஞ்சை ஆடக்காரத்தெருவில் உள்ள செண்பகவள்ளி நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பழைய இரும்பு குடோன்கள், பிளாஸ்டிக் குடோன்கள், பேப்பர் குடோன்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த பகுதியில் பழைய பிளாஸ்டிக், இரும்பு, பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டு அவை தரம் பிரிக்கப்பட்டு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு கொண்டு வந்து பொருட்களை விற்பனை செய்வார்கள்.

கடந்த 3 மாதமாக ஊரடங்கு நீட்டிப்பதால் இங்குள்ள குடோன்களில் ஏராளமான பொருட்கள் தேங்கி கிடந்தன. இந்த பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோனிலும் ஏராளமான பழைய பொருட்கள் தேங்கி இருந்தன. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. சற்று நேரத்தில் தீ மளமள வென பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள்

இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா, உதவி அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் நிலைய தீயணைப்பு அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ கட்டுக்குள் அடங்கவில்லை. பழைய பொருட்கள் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக தென்பட்டது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். அப்போது மழையும் பெய்தது. ஆனாலும் தீயின் வேகம் குறையவில்லை.

6 மணி நேரம் போராட்டம்

இதையடுத்து ஒரத்தநாடு, திருவையாறில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 6 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட தகவல் பரவியதும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இதையடுத்து அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணி காலை 11 மணி அளவில் நிறைவடைந்தது. 6 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

பல லட்சம் ரூபாய் சேதம்

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தெரியவில்லை.

இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டார்.

Next Story