வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது துணிகரம் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு


வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது துணிகரம் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 July 2020 1:27 AM GMT (Updated: 21 July 2020 1:27 AM GMT)

கோவை அருகே தூங்கிக்கொண்டு இருந்தபோது தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

கோவை,

கோவை அருகே உள்ள சின்னதடாகத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது 37). இவர் ஆனைக்கட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் வீட்டில் கதிரவன் மற்றும் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கினர். நள்ளிரவில் அங்கு வந்த ஆசாமிகள், வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டின் பீரோவை திறந்து, அதில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல் உள்பட 17 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்து 800 ஆகியவற்றை திருடிச்சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

காலையில் எழுந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்து கிடந்ததை பார்த்து கதிரவன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணை

தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் அங்கு பதிந்து இருந்த திருட்டு ஆசாமிகளை கைரேகைகளை பதிவு செய்தனர். தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே, பூட்டை உடைத்து திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story