நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பில்லூர் அணையின் நீர்மட்டம் 86 அடியை தாண்டியது


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பில்லூர் அணையின் நீர்மட்டம் 86 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 21 July 2020 7:01 AM IST (Updated: 21 July 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 86 அடியை தாண்டியது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் பில்லூர் அணை உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள இந்த அணையின் மொத்த உயரம் 100 அடி ஆகும். நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும்போது அந்த தண்ணீர் பவானி ஆற்றின் மூலம் இந்த அணைக்கு வருகிறது.

கடந்த 17-ந் தேதி அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கடந்த 18-ம் தேதி அணைக்கு வினாடிக்கு 3,197 கன அடி தண்ணீர் வந்தது.

86 அடியை தாண்டியது

இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 85 அடியை எட்டியது. இதையடுத்து மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 907 கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நேற்று காலை பில்லூர் அணைக்கு 1,258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 86 அடியை தாண்டியது. இதற்கிடையே மின் உற்பத்திக்காக ஒரு எந்திரம் இயக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

இந்த தண்ணீர் பவானி ஆற்றில் பாய்ந்தோடியது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து சென்றது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு தண்ணீர் வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பவானி ஆற்றில் இறங்கி யாரும் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story