சாத்தான்குளம் சம்பவம்: சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் - தலைவர் ஜான் மகேந்திரன் பேட்டி


சாத்தான்குளம் சம்பவம்: சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் - தலைவர் ஜான் மகேந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2020 11:15 PM GMT (Updated: 21 July 2020 7:44 PM GMT)

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லை,

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

சிறுபான்மை மக்களின் மேல் அக்கறை கொண்டவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் ஒவ்வொரு மாதமும் என்னை அழைத்து சிறுபான்மை மக்களுக்கு தேவையான கோரிக்கை பற்றி விவாதிப்பார். நெல்லை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறது என்பதை பற்றி கேட்டறிய வந்து இருக்கிறேன். சில கோரிக்கை மனுக்கள் வரப்பட்டன. அந்த மனுக்கள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். சிறுபான்மை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மசூதிகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் திறக்க வேண்டும் என கோரிக்கை வரப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பரவி வருகிறது என்று உங்களுக்கு தெரியும். இந்த நேரத்தில் வழிபாட்டு தலங்களை திறந்தால் சரியாக இருக்குமா? என்று நினைத்து பார்க்க வேண்டும். இருந்தாலும் அவர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் தெரிவித்து இருக்கிறேன்.

சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருளாதார கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் வரை ரூ.1 கோடியே 84 லட்சத்து 11 ஆயிரம் பொருளாதார கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 160 பேர் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 180 பேர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் மனு பரிசீலனையில் உள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த சம்பவம் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் சிறப்பாக விசாரணை நடத்தினார்கள் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் தாமாக முன்வந்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை சரியான பாதையில் செல்கிறது. இந்த வழக்கு தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில், தூத்துக்குடி கலெக்டர், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை மாவட்ட சிறுபான்மைத்துறை சார்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தலைமை தாங்கி, 4 பேருக்கு தனிநபர் கடனாக ரூ.16.52 லட்சம் வழங்கினார்.

இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, இன்பதுரை எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் ஜெரால்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் புஷ்பராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story