மராட்டியத்தில் டேங்கர் லாரிகளை தடுத்து நிறுத்தி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம் - கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தல்


மராட்டியத்தில் டேங்கர் லாரிகளை தடுத்து நிறுத்தி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம் - கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 July 2020 4:45 AM IST (Updated: 22 July 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

மராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்ேவறு விவசாய அமைப்புகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டன. அதன்படி நேற்று பல மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக முன்னாள் எம்.பி. ராஜூ செட்டி தலைமையிலான சுவாபிமனி சேத்காரி சங்கட்னாவினர் சாங்கிலி, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சாங்கிலி, கோலாப்பூர் வழியாக புனே - பெங்களுரூ நெடுஞ்சாலையில் வந்த பால் டேங்கர் லாரிகளை தடுத்து நிறுத்தி பாலை ரோட்டில் கொட்டினர்.

இதுகுறித்து ராஜூ ஷெட்டி கூறுகையில், "பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்க வேண்டும். அதன் பலன் நேரடியாக பால் உற்பத்தியாளர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். பால் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு 10 ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசின் தவறான கொள்கையால் தான் பால் உற்பத்தி தொழில் மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதேபோல அகமத்நகர், நாசிக், பீட் மாவட்டங்களிலும் போரட்டம் நடந்தது.

இதேபோல பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 1-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என புனே பா.ஜனதா தலைவர் ஜகதீஸ் முலிக் கூறினார். மேலும் இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் புனே மாவட்ட கலெக்டர் நாவல் கிஷோா் ராமை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்த நிலையில் பால்வளத்துறை மந்திரி சுனில் கேதார் கூறுகையில், “ஒவ்வொரு விவசாய அமைப்புகளும் ஒவ்வொரு விதமான கோரிக்கையை வைத்து உள்ளனர். அந்த கோரிக்கைகளை ஒருங்கிணைத்து பால் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அவர்களது பிரச்சினை குறித்து அடுத்த மந்திரி சபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விவசாய அமைப்புகள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.

Next Story