சின்னாளபட்டியில், ஊரடங்கை மீறி தனியார் அரங்கில் விருந்துடன் குத்தாட்டம் - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு


சின்னாளபட்டியில், ஊரடங்கை மீறி தனியார் அரங்கில் விருந்துடன் குத்தாட்டம் - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 July 2020 11:26 AM IST (Updated: 22 July 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டியில் ஊரடங்கை மீறி தனியார் அரங்கில் விருந்துடன் குத்தாட்டம் நடந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னாளபட்டி,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பல கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சின்னாளபட்டிக்கு வரும் 14 பொது வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளது. பிரதான 2 வழிகளில் மட்டும் சோதனை சாவடி அமைத்து உள்ளே வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக சின்னாளபட்டியில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், சின்னாளபட்டியில் ஊரடங்கு விதிகளை மீறி ஒரு தனியார் அரங்கில் விருந்துடன் குத்தாட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவில், விருந்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியின்றி, முக கவசம் அணியாமல், சினிமா பாடல்களுக்கு ஏற்ப குத்தாட்டம் போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

வெளியில் முக கவசம் அணியாமல் வருபவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். ஆனால் தனியார் அரங்கில் ஊரடங்கு விதிகளை மீறி இது போன்று நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளை போலீசார் ஏன் கண்டு கொள்வதில்லை? என சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story