நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி தூத்துக்குடியில் ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று


நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி தூத்துக்குடியில் ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 23 July 2020 4:00 AM IST (Updated: 23 July 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 327 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 2,852 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அம்பை, சேரன்மாதேவி பகுதியில் அதிகளவு கொரோனா பரவி உள்ளது. இதேபோல் நெல்லை மாநகரிலும் உச்சகட்டமாக கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் 2,972 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1,881 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். நேற்று மட்டும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 38 பேர், அரசு சித்தா மருத்துவ கல்லூரியில் 13 பேர் உள்பட மொத்தம் 87 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். பத்தமடையை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது உடலை எஸ்.டி.பி.ஐ. கட்சி தன்னார்வலர்கள் பாதுகாப்பாக எடுத்துச்சென்று பத்தமடையில் அடக்கம் செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 1,259 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. இதில் 450 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். மற்றவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். பின்னர் அவரது உடல் பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மேலும் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்தார்.

தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது.

காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், உடன்குடி, திருச்செந்தூர், ஆத்தூர், குலசேகரன்பட்டினம், நல்லூர், இடைச்சிவிளை, சாத்தான்குளம், கோவில்பட்டி, புதுக்கோட்டை, நாசரேத், மந்திதோப்பு, கயத்தார், கட்டாலங்குளம், வடக்கு திட்டங்குளம், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு போலீஸ் குடியிருப்பு, முத்துகுவியல், ராஜீவ்நகர், பாரதிநகர், ரங்கநாதபுரம், அத்திமரப்பட்டி, கடலோர காவல்படை குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 241 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 202 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,983 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாவட்டத்தில் 2 ஆயிரத்து 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story