செம்பனார்கோவில் அருகே பரபரப்பு: கெயில் நிறுவன குழாயில் இருந்து 15 அடி உயரத்திற்கு காற்று வெளியேறியது - கியாஸ் கசிந்ததாக பொதுமக்கள் அச்சம்
செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவன குழாயில் இருந்து 15 அடி உயரத்திற்கு காற்று வெளியேறியது. குழாயில் இருந்து கியாஸ் வெளியேறியதாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
பொறையாறு,
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது கெயில் நிறுவனம், சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக எரிவாயு குழாய்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களில் பதித்து வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
நேற்று மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த குழாயில் இருந்து திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் பயங்கர சத்தம் மற்றும் புழுதியுடன் காற்று வெளியேறியது. இதனை நேரில் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கியாஸ் கசிவு ஏற்பட்டுவிட்டதாக அச்சம் அடைந்தனர். இதனால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கெயில் நிறுவன அதிகாரி கூறியதாவது:-
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய்கள் பதிக்கும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெறாததால் குழாய்களில் இன்னும் கியாஸ் நிரப்பப்படவில்லை. கியாஸ் நிரப்பப்பட்ட பின்னர், மேமாத்தூரில் இருந்து குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரத்தில் உள்ள மின்சார நிலையத்திற்கு கியாஸ் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பூமியில் பதிக்கப்பட்ட குழாய்களை காற்று மூலம் (கம்பரசர்) சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது அழுத்தத்தின் காரணமாக புழுதியுடன் காற்று வெளியேறியது. இதனை பொதுமக்கள் கியாஸ் கசிந்ததாக நினைத்து அச்சம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அந்தபகுதி பொதுமக்கள் கூறுகையில், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக உள்ள நிலையில் மேமாத்தூரில் கெயில் நிறுவனம் 20 அடி ஆழத்திற்கு எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story